மாணவி சத்தியாவின் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

சென்னையில் மாணவி சத்தியாவுக்கு நிகழ்ந்த சோகம் இனி தமிழகத்தில் யாருக்கும் வரக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.   சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட…

சென்னையில் மாணவி சத்தியாவுக்கு நிகழ்ந்த சோகம் இனி தமிழகத்தில் யாருக்கும் வரக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. இதில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, ஆற்காடு நவாப் அப்துல் அலி கான் பகதூர் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள காட்சி கூடங்களையும், வேலை வாய்ப்பு முகாமிற்காக வைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளுக்கு அவரை நினைவு கூறும் வகையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடப்பதில் மகிழ்ச்சி என்றார்.

இந்த நிகழ்ச்சி சேப்பாக்கம் தொகுதியில், மத்திய சென்னையில் நடப்பது நம்மை விட உதயநிதிக்கும், தயாநிதிக்கும் மகிழ்ச்சி அதிகம் இருக்கும் என்றார். அடுத்ததாக தன்னுடைய கொளத்தூர் தொகுதியில் வேலை வாய்ப்பு முகாமை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்து தொகுதிகளிலும் நடத்த வேண்டும். மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாம் தனக்கு திருப்திகரமாக உள்ளது. அதிலும் ஒரு லட்சமாவது பணி ஆணை வழங்க அழைத்துள்ளனர். இதை விட ஒரு ஆட்சி நடத்தும் முதலமைச்சருக்கு என்ன வேண்டும்.

 

தன்னை பொறுத்த வரை இது சாதனை விழா தான். இதற்காக வேலை வாய்ப்பு துறை அமைச்சர் கணேசனுக்கு எனது வாழ்த்துக்கள். தொழிலாளர் துறை அமைச்சராக மட்டுமில்லாமல் தோழனாகவே அமைச்சர் செயல்பட்டு வருகிறார். கடந்த 13 மாதங்களில் 65 பெரிய வேலை வாய்ப்பு முகாம்களும், 815 சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது. 15,691 நிறுவனங்கள் அதில் பங்கேற்று உள்ளது. திராவிட மாடல் என்றால் என்ன என்ன என்று கேட்கிறவர்களுக்கு இதையும் உதாரணமாக சொல்லலாம். தன் வாழ்வில் மறக்க முடியாத எத்தனையோ நிகழ்ச்சிகளில் நிச்சயம் இந்த நிகழ்ச்சியும் இருக்கும் என்றார்.

1 லட்சம் என்பது முடிவல்ல தொடக்கம் என்ற அவர், ஒரு ஆண்டில் ஒரு லட்சம் என்றால் ஆண்டுக்கு ஒரு லட்சம் என்ற இலக்கில் அரசு செயல்படும் என்றார். வேலை இல்லை என்ற நிலையும் இருக்கக்கூடாது வேலைக்கு தகுதியான ஆட்கள் இல்லை என்றும் இருக்க கூடாது என்றுதான் செயல்படுகிறோம் என கூறினார். சென்னையில் சத்தியா என்ற மாணவிக்கு நடந்த கொடுமை சம்பவம் போல் இனி தமிழகத்தில் நிகழக் கூடாது. சமூக கல்வி என்பது அவசியமானது. தன்னை போலவே மற்ற உயிரை பார்க்கும் பக்குவம் வர வேண்டும். பிள்ளைகள் எந்த வகையில் திசை மாறி சென்று விடாமல் பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமை என கூறிய முதலமைச்சர், இயற்கையில் ஆண் வலிமையுள்ளவனாக இருக்கலாம். ஆனால் அந்த வலிமை அடக்குவதற்காக இல்லாமல் பெண்களை காக்க இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.