சுருளி அருவியில் மரக்கிளை முறிந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு!

சென்னையிலிருந்து கோடை விடுமுறையை கொண்டாட சுருளி அருவிக்கு வந்த  மாணவியின் தலையில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்தார். தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ள இந்த…

சென்னையிலிருந்து கோடை விடுமுறையை கொண்டாட சுருளி அருவிக்கு வந்த  மாணவியின் தலையில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிறந்த
சுற்றுலாத்தலமாக உள்ள இந்த அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும்
மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.
தற்பொழுது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும்  பெமினா (15 ) குடும்பத்தினருடன் சுருளி அருவிக்கு கோடைகால விடுமுறைக்காக வந்துள்ளார். அருவியில் குளித்துவிட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக அருவி சாலையில் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தபோது, வென்னியாறு பாலத்தின் அருகே இருந்த பழமையான மரத்தின் மரக்கிளை ஒன்று எதிர்பாராத விதமாக பெமினாவின் தலைப்பகுதியில் முறிந்து விழுந்தது.

தலையில் பலத்த காயம் அடைந்த பெமினாவை பார்த்தவர்கள் அலறித் துடித்து
வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தலையில் படுகாயம் அடைந்த
பெமினாவிற்கு ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் தெரிவித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு வனத்துறையினர் வந்து பெமினாவின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இது குறித்து, ராயப்பன்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ
இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதே பள்ளி மாணவி
பெமினாவின் உயிரிழப்பிற்கு காரணம் என அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்
புகார் தெரிவித்தனர்.

-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.