நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் படம் முழுமையாக முடிக்கப்பட்டு வருகிற அக்டோபர் மதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக விஜய் நடிக்கும் ’தளபதி 68’ படம் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன. அதுவும் லியோ படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அதற்குள் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. முதலில் தளபதி 68 அட்லீ இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், பின்னர் அவர் பாலிவுட்டில் பிசியானதால் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த பட்டியலில் கார்த்திக் சுப்புராஜின் பெயரும் அடிபட்டது.
தற்போது இவர்கள் அனைவரையும் தாண்டி, திடீர் திருப்பமாக ’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. அதற்காக சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய்யை சந்தித்து கதை கூறியதாகவும், அந்த கதை ஒரு மாஸ் ஆக்சன் ஹீரோவுக்கான கதையாக இருந்ததால், அந்த படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
ஏற்கனவே, அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற ஹிட் படத்தை கொடுத்ததில் இருந்தே இப்படத்தை பார்த்த விஜய், அர்ஜுன் கேரக்டரில் தான் நடித்திருக்கலாம் என்று, தனது ஆதங்கத்தை தெரிவித்ததாக, வெங்கட் பிரபுவே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தளபதி 68 படம் குறித்த இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’மங்காத்தா’ படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு, முதல் முறையாக விஜய்யுடன் கைகோர்ப்பார். அப்படி இந்த கூட்டணி கைகோர்க்கும் பட்சத்தில் படத்திற்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே யார் தளபதி 68 படத்தை இயக்குவார் என்பது தெரியவரும்.
- பி.ஜேம்ஸ் லிசா










