ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு 12-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் பள்ளி தாளாளரும் சமூக செயற்பாட்டாளருமான கணேஷ் என்பவரின் மகன் திருமுருகன் கடந்த 24-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை முடித்துவிட்டு நண்பர்களுடன் சென்று ஆரணி காந்தி சாலையில் உள்ள 5 ஸ்டார் பேமிலி ரெஸ்டாரண்டில் அசைவ உணவு சப்பிட்டுள்ளார். அப்போது பிரியாணியுடன் தந்தூரி சிக்கன் சேர்த்து சாப்பிட்டுள்ளார். இதனால், உணவு ஒவ்வாமை காரணமாக அன்று இரவு முதல் கடும் வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்த அந்த மாணவர் கடந்த 27-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து மாணவனின் தந்தை கணேஷ் ஆரணி காவல் நிலையத்தில் மகன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். ஆனால், அவரின் புகார் தொடர்பாக தற்பொழுது வரை காவல்துறை வழக்கு பதிவு செய்யாத நிலையில் மாணவனின் தந்தை கணேஷ் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்தார். அப்போது மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், ஆரணியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஷவர்மா உணவு சாப்பிட்டு பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் முறையாக உணவகங்களை ஆய்வு செய்யவில்லை. இதனால் உணவகங்கள் பழைய அசைவ உணவுகளை விற்பனை செய்வதாக குற்றம்சாட்டினார்.
மேலும், திருமுருகன் இறப்பதற்கு முன்பு தான் சாப்பிட்ட உணவகத்தில் பழைய இறைச்சிகளில் இருந்த புழுக்களை அகற்றுவதை நேரடியாக தான் பார்த்ததாகவும் அது குறித்து உணவகத்தினரிடம் கேட்டபோது அது கெட்டு விட்டதால் அதனை அப்புறப்படுத்தி விடுவதாக தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த நிலையில் மாணவன் சாப்பிட்ட உணவே பழைய உணவு தான் அதன் காரணமாக தான் தனது மகன் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி கடையின் முன் போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாணவன் உணவு சாப்பிட்ட ஃபேமிலி ரெஸ்டாரண்டில் ஆரணி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் கலீஸ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் நியூஸ் தமிழுக்கு பேட்டியளித்த நகராட்சி ஆணையர் உணவகத்தின் சுகாதாரம் குறித்தும் தூய்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டதாகவும் இன்றைய ஆய்வில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் உணவகம் தூய்மையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் ஷவர்மா சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பாதிக்கப்பட்டார்கள் அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்துள்ளார் இந்த நிலையில் அதன் தொடர்கதையாக தற்பொழுது பனிரெண்டாம் வகுப்பு மாணவன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







