திருநெல்வேலி மாவட்டம் அருகே செல்போன் கொடுக்காததால் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதநகரைச் சேர்ந்தவர் சதீஷ் (17). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். சதீஷின் தந்தை ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை சதீஷ் வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக தனது தாயிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இதற்கிடையில் மருதநகர் ரயில்வே கேட் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஒரு சிறுவன் உடல் கால், கைகள் தனியாக துண்டான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மற்றும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அது ஜெகதீஷின் மகன் சதீஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து ,பெற்றோருக்கு தகவல் தெரிவித்து சிறுவனின் சடலத்தை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மாணவன் சதீஷ் செல்போனுக்கு அடிமையாகி இருந்ததாகவும், எனவே பெற்றோர் செல்போன் கொடுக்காததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அவனுக்கு பள்ளியில் ஏதேனும் பிரச்சனையா அல்லது வீட்டில் வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து
தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளும்
சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-ம.பவித்ரா








