‘பதான்’ திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு; ஷாருக்கான் போஸ்டர்களை கிழித்து போராட்டம்

‘பதான்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாலில் வைக்கப்பட்டிருந்த ஷாருக்கானின் போஸ்டரை கிழித்து பஜ்ரங் தள் அமைப்பு தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து…

‘பதான்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாலில் வைக்கப்பட்டிருந்த ஷாருக்கானின் போஸ்டரை கிழித்து பஜ்ரங் தள் அமைப்பு தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியிருப்பதுதான் ‘பதான்’ திரைப்படம்.இப்படம் இந்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் மற்றொரு முன்னணி  நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து படத்தில் இடம்பெறுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளானது. அந்த பாடல் வீடியோ காட்சியில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்து டூயட் பாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன . இதனால் காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாகக் கூறி இந்து அமைப்பை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் மத உணர்வை புண்படுத்தும் வகையில் ‘பதான்’ படம் இருப்பதாகக் கூறி, அதனைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்குகளும் தொடுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி அயோத்தியின் ஹனுமன் காரி மட அதிபரான ராஜு தாஸ், பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு காவி நிறம் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நடிகர் ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன் என்றும் கூறியதோடு, ஷாருக்கானை யாராவது தீயிட்டு எரித்தால் அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் வரை சென்று போராடவும் தயார் என தெரிவித்துள்ளார்.

இவரைப்போலவே மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ள ‘பதான்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, கூறியுள்ளார். இதுமட்டுமின்றி பேஷாராம் ராங் பாடலும் எதிர்ப்புக்கு உரியது. காவி மற்றும் பச்சை நிற ஆடைகள் அணிந்துள்ள விதம், பாடலின் வரிகள் மற்றும் திரைப்படத்தின் பெயர் ஆகியவைதான் அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்து அமைப்புகளின் இந்த எதிர்ப்புகள் குறித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதுபோன்ற எதிர்ப்புகளும், விவாதங்களும் தேவையற்றது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் தான் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் இயங்கி வரும் ஆல்பா ஒன் மாலில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாலில் நடிகர் ஷாருக் கான், மற்றும் பிற நடிகர் நடிகைகள் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் , படத்தின் போஸ்டர்கள், பெரிய அளவிலான கட்-அவுட்டுகள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒரு பிரிவினரான பஜ்ரங்தள அமைப்பு தொண்டர்கள் திடீரென உள்ளே நுழைந்து போஸ்டர்கள், நடிகர்ளின் புகைப்படங்கள் ஆகியவற்றை கிழித்து, வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படம் திரையிடப்பட்டால், இதனை விட கடுமையான போராட்டம் நடத்தப்படும் என அந்த வணிகவளாக நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்து, கோஷங்களை எழுப்பினர். பஜ்ரங்தள அமைப்பு தொண்டர்களின் இந்த செயல் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு, தற்போது அவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் கடந்த செவ்வாய் கிழமை அன்று மத்திய பிரதேச மாநிலத்திலும் ஐநாக்ஸ் திரையரங்கில் இந்து ஜக்ரான் மஞ்ச் என்ற அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, படம் திரையிடப்பட கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

எது எப்படி இருந்தாலும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘பதான்’ திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.