பத்திரிகைகள் குறித்த அமைச்சர் கருத்துக்கு சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு!

பத்திரிக்கைகள் தங்களுக்கு சாதகமான கருத்துக்களை எழுதுவதாக அமைச்சர் கீர்த்தனா கூறியது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், “தமிழக அரசு சார்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன எனக் கூறினீர்கள். அதில் புதிய நிறுவனங்களின் எண்ணிக்கையைக் கூற வேண்டும். நாங்கள் கொண்டுவந்த நிறுவனங்களின் விரிவாக்கமாகத்தான் நான் பார்க்கிறேன்” என்றார்.

இதற்குப் பதில் அளித்த தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, “திமுக ஆட்சியில் முதல் 30 நாட்களில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார்கள் எனக் கூற வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், “நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. 3 மாத காலத்தில் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தோம். முதல் காலாண்டு ஒப்பீடு வந்தது. கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தொழில் முதலீடு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 மாதத்தில் தொழில் முதலீடு 74.48% சரிந்துள்ளது. மற்ற மாநிலங்களில் சதவிகிதம் 200% வரை உயர்ந்துள்ளது” எனக் கூறினார்.

இதற்குப் பதில் அளித்த தொழிற்துறை அமைச்சர், “தனியார் பத்திரிகையில் பணம் கொடுத்தால் எழுதிக்கொள்வார்கள். அதில் வந்த தவறான தகவலை வைத்து அரசைக் குறை சொல்லக்கூடாது. 3 மாதத்தில் 1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையை முதலீட்டாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்துறையில் அரசியல் பார்க்கக் கூடாது” என்றார்.

இதனையடுத்து பேசிய எ.வ.வேலு, “பணம் கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எது வேண்டுமானாலும் எழுதுவார்கள் என்பது தவறு. ஜனநாயகத்தின் 4-வது தூணை கொச்சைப்படுத்தக் கூடாது” என்றார்.

இதையடுத்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, “அரசின் செயல்பாடுகள் குறித்து மூன்றாவது கண்ணாகப் பத்திரிகை ஊடகங்கள் எழுதுவார்கள். என்ன நடக்கிறதோ அதை எழுதுவார்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சியிடம் பணம் வாங்கிக்கொண்டு எழுதுவார்கள் எனப் பொதுவாகக் கூறக்கூடாது. ஒட்டுமொத்தமாகக் கூறுவது போல் ஆகிவிடும்” என்றார்.

இதற்குப் பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “ஒருசில பத்திரிகைகள் தங்களுக்கு தேவையான, நம்பகத்தன்மை இல்லாத கருத்துக்களை எழுதுவார்கள். இதை வைத்து பேசக்கூடாது. முதலீட்டாளர்களுக்கு தவறான எண்ணம் ஏற்படும், மாநிலத்திற்குக் கெட்ட பெயர் வரும் என்றுதான் அமைச்சர் கீர்த்தனா கூறினார்” என்றார்.

இதையடுத்து பேசிய சபாநாயகர், “1998-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி கலைஞர் அவர்கள், பத்திரிகையில் வரும் செய்தியை வைத்து விவாதம் செய்வது அழகல்ல எனக் கூறியுள்ளார்” என்றார். அதேபோல, 2010-ஆம் ஆண்டு அவை முன்னவராக இருந்த அன்பழகன் கூறுகையில், “வெளியில் உள்ள செய்தியை இங்கு பதிவு செய்ய இது பதிவுத்துறை அலுவலகம் அல்ல” எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.