முக்கியச் செய்திகள் தமிழகம்

‘மனித உரிமைகள்’ எனும் வார்த்தையை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

மனித உரிமைகள், ஒன்றியம், மாநில, கவுன்சில் வார்த்தைகளை தனியார் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், “மனித உரிமைகளை பேண தேசிய அளவில் தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில அளவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மனித உரிமைகள் ( Human Rights ) என்ற வார்த்தைகளை சில தனியார் அமைப்புகள் தங்களது பெயருடன் சேர்த்துக்கொண்டு தங்களை தேசிய மற்றும் மாநில உரிமைகள் ஆணையங்களுடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருவதாக புகார்கள் மேலெழுந்துள்ளது.

தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் படி மனித உரிமைகள் என்ற சொல்லை தனியார் அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயருடன் சேர்த்து பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் என்ற சொல்லாடலை பயன்படுத்தி வந்த அமைப்புகள் அச்சொல்லாடலை தங்களது பெயரிலிருந்து நீக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே தனியார் அமைப்புகள் தங்களது பெயரை குறிப்பிடும் போது இது ஒரு தனியார் அமைப்பு என்ற பெயர் இணைப்புடன் செயல்பட வேண்டும்.

மனித உரிமைகள் என்ற வார்த்தையை வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் பெரிய அளவில் மனித உரிமைகள் என்ற பெயர்ப்பலகை மற்றும் எஸ்டிக்கர்களை பொருத்தி கொண்டுள்ளனர். ஒரு மாவட்டத்தில் நமது காவல்துறை அதிகாரிகளே இவ்வாறான அமைப்பை திறந்து வைத்திருக்கும் சம்பவமும் நடந்துள்ளது.

இவ்வாறு வாகனங்களில் மனித உரிமைகள் அல்லது ஒன்றியம் அல்லது மாநில அல்லது கவுன்சில் என்ற பெயர் கொண்ட எஸ்டிக்கர்கள் கொண்டு இயக்கப்படும் வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று காவல் ஆணையாளர்கள், மண்டல காவல்துறை தலைவர்கள் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு

Halley karthi

தமிழிசை சவுந்தரராஜன் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

Gayathri Venkatesan

டெங்கு பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

Ezhilarasan