அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாத்திர பதிவு மற்றும் வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்து சென்றுள்ளனர். இந்த நிலையை சமாளிக்க அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கு அரசு துணை நிற்கும். வணிகர் என்ற போர்வையில் அரசை ஏமாற்றும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “பத்திரப்பதிவு துறையில் கடந்த ஆட்சியில் ஆள்மாறாட்டம், போலி பத்திரப்பதிவு உள்ளிட்ட தவறுகள் நடந்துள்ளது. இதை எளிமைப்படுத்த சில மாற்றங்களை கொண்டு வர உள்ளோம். தவறான பத்திர பதிவுகள் மீது உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கே அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேடுகளில் ஈடுபட்ட அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.” என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்து மக்கள் ஏமாற வேண்டாம். பொதுமக்களே நேரடியாக ஆன்லைன் மூலம் முத்திரைத்தாள் கட்டணத்தை கட்டலாம். பத்திரம் பதிவை மேலும் எளிமையாக்கி 10 நிமிடத்திற்குள் பொதுமக்கள் பத்திரத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யார் தலையிடும் இல்லாமல் வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.” என அமைச்சர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.







