முக்கியச் செய்திகள் கட்டுரைகள் செய்திகள் சினிமா

அன்னை நயன்தாராவின் கதை


பிரபாகாரன்

இறகை போன்று இலகுவான சின்னஞ்சிறு அழகிய விரல்கள். குழந்தைகளுக்கே உரிய செக்கச் சிவந்த பாதங்கள். பிறந்த இரட்டை குழந்தைகளையும் இருகக் கட்டியணைத்து, அவர்களுடன் எதிர்காலத்தில் துள்ளி விளையாடப் போகும் அழகிய நாட்களை எண்ணி மகிழ்ச்சியில் முத்தமிட்டு ஒத்திக்கொள்ளும் பெற்றோர். ”நானும் நயனும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். உங்களது அனைவரது வாழ்த்தும் எங்களை வந்தடையட்டும். உயிரும் உலகமும்” என தானும் தனது மனைவி நயன்தாராவும், தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை கொஞ்சும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் பதிவிற்கு, உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவியத் தொடங்கின. விக்னேஷ் சிவனின் அந்த பதிவு, இந்திய அளவில் trend ஆகவும் தொடங்கியது. அதில் முக்கிய கவனம் பெற்றது நடிகை நயன்தாராவின் புகைப்படம் தான். இரு குழந்தைகளையும் இருக அணைத்துக்கொண்டு கொஞ்சும் நயன்தாரா முகத்தில் அத்தனை மகிழ்ச்சி வெளிப்பட்டது. பல நாட்களாக இந்த தருணத்திற்காகவே காத்திருந்து, நிறைவேறிய மகிழ்ச்சி தான் அது.

 

பல நாட்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி, 2022 ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஜூன் 9ம் தேதி சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. விடுதியே விழா கோலமாக காட்சியளித்தது. இவர்களுடைய திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த், இயக்குனர் மணிரத்னம், கார்த்தி, இயக்குநர் அட்லீ உள்ளிட்ட உச்ச நட்சத்திர திரை பிரபலங்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். சொல்லப்போனால், அவர்களது திருமண விருந்தின் மெனுவே சமூக வலைதளங்களில் வைரலாகியது. ட்விட்டரில் அவர்களுடைய திருமணம் தொடர்பான ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் டிரெண்டாகின. ஜூன் மாதம் திருமணம் முடிந்த நிலையில் 4 மாதங்களில் எப்படி குழந்தை என்ற கேள்வி தற்போது எழுந்தது. அப்போது தான், அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்து, அது மேலும் விவாதத்தை சூடுபிடிக்க வைத்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றனர் என்பது ஏற்கக்கூடிய பதிலாக இருந்தாலும், அதில் சட்ட சிக்கல் இருப்பதாகவே சட்ட வல்லுநர்கள் பல கேள்விகளை எழுப்பத்தொடங்கினர். கருவை சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் ஒன்றிணைத்து, கருவை உருவாக்கி, வேறொரு பெண்ணின் மூலம் குழந்தையை பெற்றுத் தருவதே வாடகை தாய் முறை.

சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட நடிகைகள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். அமீர்கான், ஷாருக்கான், துஷார் கபூர், கரன் ஜோஹர் உள்ளிட்ட இந்தி திரையுலக பிரபலங்கள் தங்கள் மனைவியர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளனர். ஆனால் அதற்கு சில விதிமுறைகளும் உண்டு. திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவான நிலையில், ஏதேனும் நோய் பாதிப்பு மற்றும் கருத்தரிப்பதால், உயிருக்கு ஆபத்து ஏற்படுவது உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே, ஒருவர் வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும் என சட்டம் சொல்கிறது. அதுமட்டுமல்லாமல், தம்பதியின் உறவினர்களில் ஒருவரைத்தான் வாடகை தாயாக நியமிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இத்தனை விதிமுறைகளையும் நயன் தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் பின்பற்றினரா? அல்லது விதிமுறைகள் மீறப்பட்டதா? என்ற விவாதமே இணையமெங்கும் எழுந்தது.

வாடகை தாய்

“surrogacy எனப்படும் வாடகத் தாய் முறை என்றால் என்ன?” என்பதும் trend ஆகத் தொடங்கியது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் விவகாரம் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்று விளக்கம் கேட்கப்படும். திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும். சுகாதாரத்துறையின் மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இப்படியாக, நயன்தாரா குறித்த சர்ச்சை ஒருபுறம் trendஆகிக் கொண்டிருக்க, அவரது திருமணம் குறித்த வீடியோ ஒன்றும் மறுபுறம் trendஆகிக் கொண்டிருந்தது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு மிகப்பெரிய தொகைக்கு netflix ott நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

அது முழுக்க முழுக்க நயன்தாராவை மையமாக வைத்தே உருவானது. செப்டம்பர் முதல் சீசனாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு விரைவில் வெளியாகும் எனவும், அதில் திருமணம் மற்றும் அது சார்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இடம் பெறுகின்றன என்றும் தகவல் வெளியாகின. அதன் வரவேற்பை பொறுத்து, அடுத்த சீசன்கள் நயன் தாராவின் வாழ்க்கையை மையப்படுத்தியே உருவாகும் எனவும் நயன்தாரா தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது. பல சீசன்களாக உருவாகும் அளவிற்கு அப்படி என்ன நயன் தாரா சாதித்துவிட்டார்? என்ற கேள்வியை எழுப்பும் முன், அவரது lady superstar என்ற பட்டமே நயன்தாரா என்ற நாயகியின் பல கதைகளை சொல்லும். திரைத்துறையில் சுமார் 20 ஆண்டுகள் கதாநாயகியாக வலம் வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவது என்றால் சும்மாவா… இப்படி தென் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா எந்தவித சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர். மலையாள குடும்ப பின்னணி கொண்ட நயன்தாரா, 1984 நவம்பர் 18ம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஒரு பாரம்பரிய கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தார். ‘டயானா மரியம் குரியன்’ என இயற்பெயர் கொண்ட நயன்தாராவின் தந்தை கொடியட்டு குரியன் இந்திய விமான படையில், விமானியாக பணியாற்றியவர். இதன் காரணமாக தன்னுடைய பள்ளி நாட்களை வட இந்தியாவில் கழித்தார் நயன்தாரா.

நயன்தாராவின் வளர்ச்சி

தந்தையின் பணி ஓய்வுக்கு பின்னர், நயன்தாராவின் குடும்பம் கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள பூர்வீக வீட்டிற்கு குடிபெயர்ந்தது. அங்குள்ள மார்த் தோமா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பட்டம் பெற்றார் நயன்தாரா. இதன்காரணமாகத்தான் நயன்தாராவுக்கு திரைப்படங்களில் ஆங்கில மொழியில் பேசவோ, பெயர்களை உச்சரிக்கவே சிரமம் ஏற்படுவதில்லை. குறிப்பாக, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவின் Famous Dialouge ஆன “Parden” என்ற வார்த்தையின் உச்சரிப்புக்கு பின்னால் உள்ள, அழகியலும், யாராடி நீ மோகினி படத்தில் ஆங்கிலம் பேசும் ஐடி கம்பெனி டீம் லீடர் கதாபாத்திரத்திலும், மிக கச்சிதமாக பொருந்தினார் நயன்தாரா.

கல்லூரி காலத்திலேயே ஆங்கரிங், டிவி ஷோ என தொலைக்காட்சிகளில் கவனம் செலுத்த தொடங்கிய நயன்தாரா, பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்கட்டின் ‘மனசினக்கரே’வில் நடிக்க தேர்வானார். அப்போதுதான், மரியம் குரியன் என்ற பெயருக்கு பதில், இயக்குநர் சத்யன் சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் சூட்டினார். நயன்தாரா என்றால் நட்சத்திரம் என்ற பெயரின் அர்த்தத்திற்கு ஏற்றார்போல, நயன்தாரா நட்சத்திரமாக திரைவானில் மின்னிக் கொண்டிருக்கிறார்.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் லாலுடன், அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார். நயன்தாராவின் குடும்ப பாங்கான முகமும், இயல்பான நடிப்பின் காரணமாக, இயக்குநர் ஹரி, அய்யா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்தார். 2005ல் வெளியான அய்யா திரைப்படத்தில், ‘ஒரு வார்த்த சொல்ல ஒரு வருஷம்’ பாடல் மூலம் பட்டித் தொட்டி எங்கும் நாயகியாக அறியப்பட்டார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தமிழர்களை கவர்ந்தார். அய்யா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா தன் தனித்துவ நடிப்பால், ஸ்கோர் செய்திருந்தாலும், துர்கா கதாபாத்திரத்தில் தோன்றிய நயன்தாரா, 75 கோடி ரூபாய் வசூல் சாதனைச் செய்த, மெகா ஹிட் படத்தில் தன்னுடைய இருப்பை பதிவு செய்தார். சந்திரமுகி படத்தின் மூலம் ரஜினிக்கு ஏற்ற ஜோடியாக நயன்தாரா மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்.


தொடக்கத்தில் மலையாளம் மற்றும் தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்த நயன்தாரா, திரையுலகில் தாக்குபிடித்து நிற்க, மார்டன் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். அப்போது, தமிழ் திரையுலகில் Family Roleகளிலும், மார்டன் ரோல்களிலும் முன்னனி நாயகியாக அசின் வலம் வந்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சூர்யா, அசின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, கஜினி படத்தில் second ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். கஜினி படத்தில் கிளாமராகத் தோன்றிய நயன்தாரா, இளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இளைஞர்களை கவர கமர்ஷியல் ஹீரோயினாக மாற வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, அதற்கான முயற்சிகளில் இறங்கினார். அதேநேரம் சினிமாவில் நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான், நடிப்பேன் என்ற வட்டத்திற்குள் தன்னை சுருக்கிக்கொள்ளாமல், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான, சிவகாசி படத்தில், ”கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாரியா” பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

நயன்தாரா – பிரபுதேவாவின் காதல் 

கள்வனின் காதலி, வல்லவன் என அடுத்தடுத்து வெளியான படங்களிலும் கிளாமர் ரோல்களில் கலக்கினார் நயன்தாரா. 2007ல் சிவாஜி படத்தில், ரஜினியின் introduction பாடலான, ”பல்லேலக்கா” பாடலில் உடல் எடை குறைந்து, சந்திரமுகி துர்காவா என ஆச்சரியப்படுத்தினார். நயன்தாராவின் புதிய அவதாரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைதுறையினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நயன்தாராவின் முயற்சி அவருக்கு நல்ல பலனையே அளித்தது. அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஸ்லிம்மான, கட்டுக்கோப்பான உடலமைப்புடன் பில்லா படத்தில் தோன்றிய நயன்தாரா, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பில்லா படத்தில் நயன்தாராவின் இன்டேரா காட்சியில், High Heelsவுடன், கார் மேல் ஏறி நடந்துவரும் நயன்தாரா, இனி திரையுலகில் எந்த பிரச்சனை வந்தாலும், அதனை சமாளிக்க தயார் என்பது போல கம்பீரமாக காட்சி அளித்தார்.

பில்லா படம் அஜித்துக்கு எப்படி COMEBACK படமாக அமைந்ததோ, அப்படி நயன்தாராவுக்கும் திருப்புமுனையாக அமைந்தது. இதன்பின்னர் சத்யம், ஏகன் என நயன்தாரா நடித்த படங்கள், அவரை ஒரு கமர்ஷியல் ஹீரோயினாக பரினமிக்க வைத்தது. இதற்கிடையில் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி படங்களும் வசூல் சாதனைப்புரிந்தன. இதன் காரணமாக நயன்தாராவின் மார்கெட் வேல்யூ கிடுகிடுவென உயர்ந்தது. 2009ல் பிரபுதேவா இயக்கத்தில், விஜய், நயன்தாரா கூட்டணியில் வில்லு படம் வெளியானது. படத்தின் உருவாக்கத்தின் போது, பிரவுதேவா, நயன்தாரா இடையே காதல் உருவானதாக பேசப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பொதுநிகழ்ச்சிகள், திரைப்படம் ப்ரோமோஷன்களில் நயனும் பிரபுதேவாவும் ஒன்றாக கலந்துகொண்டது பேசுப்பொருளானது. இதன் அடுத்த கட்டமாக, இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார் பிரவுதேவா. ஆனால் பிரவுதேவா, 2வது திருமணம் செய்துக்கொள்ள அவரின் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும், ரமலத் இசைவு தெரிவிக்கவில்லை. பலகட்ட இழுபறிக்கு பிறகு பிரபுதேவாவுக்கு விவாகரத்து அளிக்க சம்மதம் தெரிவித்தார் ரமலத். ஆனால், இதன் பிறகுதான் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே சிக்கல்கள் எழுந்தன. ஒருகட்டத்தில் பிரச்சனை தீவிரமடைந்ததால், நயன்தாரா பிரபுதேவா காதலில் முறிந்தது.

இதனால், கடும் மனவேதனைக்கு உள்ளான நயன்தாரா, சினிமாவில் இருந்தே விலகி இருக்க முடிவு செய்தார். அப்போது தமிழில் நடிகர் சூர்யாவுடன் ஆதவன் படத்தில் மட்டுமே நயன்தாரா நடித்திருந்தார். கிட்டத்தட்ட 11 மாதங்கள் திரையுலகில் இருந்து விலகியிருந்தது தொடர்பாக, VOUGE இதழுக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் இருந்து விலகியிருந்த நாட்களில் என்னை நானே புரிந்துக்கொள்ள முயற்சித்தேன் என்றார்.

சினிமாவில் மீண்டு எழுந்த நயன்தாரா 

அந்தளவுக்கு மனஅழுத்தத்தில் இருந்த நயன்தாரா, 2011ம் ஆண்டு, தெலுங்கில் ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் நயன்தாரா சீதா கதாபாத்திரத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவரைச் சுற்றி எழுந்த பிரச்சினை காரணமாகவும், எதிர்ப்பு எழுந்தது. ஆனால், படத்தின் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா, நயன்தாராவுக்கு உறுதுணையாக இருந்தார். இந்நிலையில், 2011 நவம்பர் 17ல் வெளியான ஸ்ரீ ராம ராஜ்யம் படம், சூப்பர் டூப்பர் ஹீட் படமாக வெற்றிப்பெற்றது. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆந்திரா அரசின் மிக உயரிய விருதான, நந்தி விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

இதன்பின்னர், 2013ல் ராஜா ராணி படம் வெளியானது, நயன்தாராவின் எமோஷ்னல் மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும், திரையுலகிலும் பல சவால்களை வெற்றிகரமாக கடந்தவந்த நயன்தாராவை,
ராஜா ராணிக்கு பிறகு, தமிழ் ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அந்தாண்டின் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை நயன்தாரா பெற்றார். அதே போல் அந்தாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதும் நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.


இந்த காலகட்டத்தில் உதயநிதியுடன் இணைந்து நன்பேண்டோ, இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார். அப்போது தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு போட்டியாக களத்தில் வேறு ஹீரோயின்கள் இல்லாததும் அவருக்கு PLUSEபாயின்டாக மாறியிருந்தது. காதல்களில் தோற்று ஊடகங்களின் வெளிச்சத்தில் படாமல் இருந்த, நயன்தாரா இந்தகால கட்டத்தில் முழுமையாக மாறியிருந்தார். பிரச்சனைகளை நேராக எதிர்கொள்ள தொடங்கினார். தமிழுக்கு REENTRY கொடுத்த நயன்தாரா, தன்னுடைய நடிப்பிலும், ஊடகங்களை கையாள்வதிலும் முதிர்ச்சி அடைந்திருந்தார்.

 

நயன்தாராவின் இந்த புதிய மாற்றத்திற்கு காரணம், தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்த சறுக்கல்களும் பிரச்சனைகளுமே. இதனை அடுத்து Heroine Based படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2015ல் வெளியான மாயா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது. Horror கதை அம்சத்தைக் கொண்ட, மாயா படத்தில் சிங்கிள் மதர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் நயன்தாரா. அதே ஆண்டில் வெளியான, நானும் ரவுடிதான் படம், நயன்தாராவின் திரை வாழ்விலும் சரி தனிப்பட்ட வாழ்விலும் சரி முக்கிய படமாக அமைந்தது. காதம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நயன்தாரா, அப்படத்தின்போது இயக்குநர் விக்னேஷ் சிவனின் காதலியாக மாறினார் நயன்தாரா. இந்நிலையில் நடிகர் சிம்புவுடன், இது நம்ப ஆளு படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. இதன்மூலம் தன்னுடைய PEARSONAL விஷயங்களையும், தொழிலையும் தனித்தனியாக, நயன்தாராவால் கையாளமுடியும் என்பதை நிரூபித்துக்காட்டினார்.

அறம் படத்தின் மூலம் உச்சம்

ஹீரோயின் Based படங்களில் நடித்துவந்த நயன்தாராவுக்கு, அவரை மாஸ் ஹீரோயினாக மாற்றிய படம் என்றால், அது கோபி நயினார் இயக்கத்தில் 2017ல் வெளியான அறம் படம்தான். அப்படத்தில் துணிச்சல்மிக்க மாவட்ட ஆட்சியராக நடித்திருப்பார்.

அறம் படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் தனக்கு நட்சத்திர கதாநாயகர்கள் தேவையில்லை, கதையும் தனது நடிப்பும் மட்டுமே போதும் என தமிழ் திரையுலகத்திற்கு சொல்லியிருகந்தார். இதன்பின் வெளியான டோரா, கோலமாவு கோக்கிலா, இமைக்கா நொடிகள், ஐரா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை, நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டாராக மாற்றியது. படத்தின் டைட்டிலைத் தாங்கி ஒரு நடிகையால் வெற்றிப்படங்களை கொடுக்க முடியும், என வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நிரூபித்தார் நயன்தாரா. நயனை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு, ஏற்படுத்தி தயாரிப்பாளர்களின் நாயகியாக மாறினார் நயன்தாரா.


தமிழ் சினிமாவின் பெண் சிங்கமாக உள்ள நயன்தாராவை, சீண்டினால் அவர் சும்மா விடமாட்டார் என்பதற்கு உதாரணம் நடிகர் ராதாரவி. நயன்தாரா நடிப்பில் 2019ல் வெளியான கொலையுதிர் காலம் திரைப்பட Promotion விழாவில் நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்துகளை பேசிய ராதாரவி, அதன்பின்னர் அரசியல் ரீதியாகவும் சமூகத்திலும் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டார். பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்காக ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல் அவரின் கருத்துக்கு அவரின் தங்கையும், நடிகையுமான ராதிகாவும் கண்டனம் தெரிவித்திருந்தார். நயன்தாராவுக்கு ஆதரவாக, தென்னிந்திய நடிகர் சங்கமும், ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதன்பின்னர், நயன்தாரா குறித்து, தான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தன்னுடைய கருத்து நயன்தாராவை காயப்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார் ராதாரவி.

நடிப்பாரா அல்லது இல்லத்தரசியா? 

இந்நிலையில் நடிகை என்ற பிம்பத்தை தாண்டி தயாரிப்பு துறையிலும், கால்பதிக்கத் தொடங்கியுள்ளார் நயன்தாரா. காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் நயன். நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் rowdy pictures தயாரிப்பில் உருவாகி பெரும் கவனம் பெற்றன.

நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும், சமூக வலைத்தளத்தில் பதிவேற்றும் புகைப்படங்கள், ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துபவை. அவரது, திருமணம், சமீபத்தில் பிறந்துள்ள இரட்டைக் குழந்தைகள் என நயன்தாரா தனிப்பட்ட வாழ்வு தொடர்பான அனைத்தும் trend ஆகிவிடுகின்றன. அதே நேரம் சர்ச்சைகளும் தலைகாட்டுவதுண்டு. இப்படி சர்ச்சைகளையும், சவால்களையும் கடந்துதான் திரைத்துரையில் உச்சம் தொட்டுள்ளார் நயன்தாரா. கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படாத சினிமாதுறையில் 20 ஆண்டுகளாக தாக்குப்பிடித்து lady superstarஆக வளம் வருகிறார் நயன்தாரா. தற்போது, இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாக மாறியிருக்கும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது இல்லத்தரசியாக வாழ்க்கையை தொடருவாரா என்பதை அவர்தான் அறிவிக்கவேண்டும். ஆனால் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இதயத்தில் அவர் என்றும் நீங்கா இடம்பெற்றுள்ளார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இரு மடங்காக அதிகரித்த கொரோனா

Halley Karthik

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் – எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்

Niruban Chakkaaravarthi

தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

Halley Karthik