தாமிரபரணி ஆற்றில் இருந்து, வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்பி கனிமொழி உறுதியளித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு வார காலமாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நேற்று இரவு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டது. இந்த நீர் இன்று காலை நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையான மருதூர் அணைக்கட்டுக்கு வந்துகொண்டிருக் கிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மருதூர் அணைக் கட்டில் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உட்பட அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, பாபநாசம் நீர்ப்பிடிப்பு பகுதி களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் நேற்று தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் புன்னக்காயல் வரை செல்லும். எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆற்றின் கரையோரம் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க மழைக்காலம் முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.








