தமிழகத்தில் சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கு நடவடிக்கை -அமைச்சர் மெய்யநாதன்

தமிழகத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எந்த மாதிரியான சர்வதேச போட்டிகளை நடத்தலாம் என்பது குறித்து தமிழக முதல்வர் முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறார் என கிருஷ்ணகிரியில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கிருஷ்ணகிரி…

தமிழகத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எந்த மாதிரியான சர்வதேச போட்டிகளை நடத்தலாம் என்பது குறித்து தமிழக முதல்வர் முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறார் என கிருஷ்ணகிரியில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று துவங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகம் முழுவதிலும் இருந்து 17 வயதுக்குட்பட்ட 5 ஆயிரம் பேர் பங்கேற்க கூடிய இந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளை கண்டறிந்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அவர்களில் தகுதியான நபர்களை தேர்வு செய்து ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.

மேலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல்வர் அவர்கள் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டத்தை அறிவித்து அதற்கு முதற்கட்டமாக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார். மேலும் முதல்வர் விளையாட்டு துறைக்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதின் அடிப்படையில் வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை உலக மகளிர் டென்னிஸ் போட்டியானது சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது அதைத்தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடத்துவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார். இன்று துவங்கிய இந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 14 வயது முதல் 20 வயது வரை நான்கு பிரிவுகளின் கீழ் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு வகையான தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் இருந்து ஏராளமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

துவக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநிலத் தலைவர் வால்டர் தேவாரம், தடகள சங்கத்தின் துணைத் தலைவரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.