கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதியை பெற்றுதர அவரது பெற்றோருக்கு துணைநிற்போம் என சீமான் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடுத்தடுத்து கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் மாணவி மரணத்தில் உள்ள மர்மம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவி மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
இது குறித்து சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதிவிசாரணைக்கோரும் பெற்றோர்களை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல்கூறினேன். அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர துணைநிற்போம் என்று உறுதியளித்தேன் என தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்