நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக எஸ்டிபிஐ கட்சி இருக்கும் – நெல்லை முபாரக் அறிக்கை!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக எஸ்டிபிஐ கட்சி இருக்கும் எனவும் மணிப்பூர் மக்களுக்கான போராட்டத்தை பாஜக திசை திருப்புவதாகவும் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீடு…

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக எஸ்டிபிஐ கட்சி இருக்கும் எனவும் மணிப்பூர் மக்களுக்கான போராட்டத்தை பாஜக திசை திருப்புவதாகவும் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஞாயிறு சோதனையில் ஈடுபட்டனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டித்தது மட்டுமின்றி, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் மத்திய அரசின் ஏவல் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

”மத்திய பாஜக அரசு தன்னுடைய தோல்விகளை இயலாமைகளை மறைப்பதற்காக நாட்டிலேயே ஜனநாயக அடிப்படையில் குரல் எழுப்புகிற ஜனநாயக சக்திகளின் குரல்வலையை நசுக்குவதற்காக தன்னுடைய ஏஜென்சியை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சட்ட விரோதமான, உண்மைக்குப் புறம்பான சோதனை நடத்தியதை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து ஜனநாயக கட்சிகளும் இந்த என்ஐஏ சோதனையை கண்டித்து உள்ளனர்.

மக்கள் தேவைக்காக போராடும், முதலாவதாக குரல் கொடுக்கும் எஸ்டிபிஐ கட்சியின் குரல்வளையை நெருக்குவதற்காகவும், மக்களிடத்திலிருந்து எஸ்டிபிஐ  கட்சியை பிரிப்பதற்காகவும் மத்திய அரசு ஏஜென்சிக்கு வழங்கப்பட்டுள்ள அஜெண்டாவாக உள்ளது. எஸ்டிபிஐ கட்சி இந்த சோதனைகளுக்கு பயப்படாமல் ஜனநாயக அடிப்படையில் தொடர்ந்து மக்களுக்காக போராடும்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி பாஜகவின் தோல்விக்கு காரணமாக இருக்கும். மணிப்பூர் மக்களுக்காக போராடும் போராட்டத்தை திசை திருப்பும் விதமாக இந்த நடவடிக்கையை பார்க்கிறோம். தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, என்ஐஏ அமைப்புகள் சுதந்திரமாக திரிகிறார்கள். சிபிஐ மாநிலத்தில் அனுமதி இல்லாமல் சோதனை நடத்தக் கூடாது என்பதைப் போல அமலாக்கத்துறை, என்ஐஏ அமைப்புகள் அந்த மாநிலத்தின் அரசின் அனுமதி இல்லாமல் கைது நடவடிக்கையும் விசாரணையும் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.”

இவ்வாறு நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.