மதுரையில் மின்வாரியத்தின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்தில் ஜூடோ விளையாட்டு வீரரின் கால் அகற்றப்பட்டதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான பரிதி விக்னேஸ்வரன் பல்வேறு ஜூடோ போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இவர் நேற்று முன்தினம் கோச்சடை பகுதியில் தனது நண்பர் வீட்டுக்கு பரிதி சென்ற போது அங்கு பழுதான மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பரிதி விக்னேஸ்வரன் மீது மின்கம்பம் திடீரென விழுந்ததில் மாணவனின் இடது கணுக்கால் முறிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மின்கம்பம் மாற்றும் பணியின் போது, அறிவிப்பு பலகை வைக்காமலும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றாமலும் மின்வாரிய அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டதே ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரனின் கால்முறிவுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தனது வாழ்க்கையே போய்விட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞர் உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார். விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து போலீசாக வேண்டும் என்ற தனது கனவு முடிவுக்கு வந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள பரிதி விக்னேஸ்வரன், தமிழ்நாடு அரசு தனக்கு உரிய நிவாரணமும் வேலையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காலை இழந்த விளையாட்டு வீரர் பரிதி விக்னேஸ்வரனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.







