புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் பார்வையாளர் மாடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை –…

மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

7வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 போட்டி வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடைபெறுகின்ற இப்போட்டியை உலக தரம் வாய்ந்த மைதானத்தில் தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இந்த போட்டிகளில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்க உள்ளனர்.

ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ள சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அவருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் பேரன் இன்பநிதி, அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, விளையாட்டுத்துறை செயலர், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை 2023 போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். போட்டியினை நடத்துவதற்காக ரூபாய் 12 கோடி நிதியினை 6-ம் தேதி ஹாக்கி இந்தியா நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பாரிஸ் ஒலிம்பிக் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தனர்கள் அமருவதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்கக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் பிற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.