புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு
இருந்தும் அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் சட்டமன்றத்தில் கூட எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்பட முடியவில்லை. ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் கூட மக்கள் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் ஒருமித்த கருத்தோடு உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய அதிமுக சார்பில் இன்றைய தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் காரணமாக புதுச்சேரியில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உணவகங்கள் உள்ளிட்ட எந்த விதமான கடைகளும் இல்லாததால் சுற்றுலா பயணிகள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குறிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.







