முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநில, மத்திய அரசின் உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாநில,மத்திய அரசுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 50 காவல் கமாண்டோக்களைக் கொண்டு 6 மருத்துவமனையை சேர்ந்த 3,000 மருத்துவ களப் பணியாளர்களுக்கு உணவு தயாரித்து காவல் துறை வாகனம் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர். இதனை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முழு ஊரடங்கு பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது. தொற்றின் அளவு சரி பாதியாக குறைந்துள்ளது நம்பிக்கையை தருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

கிராம மக்கள் மத்தியில் தடுப்பூசிக்கு பெரிய வரவேற்பு உள்ளதாகக் கூறிய அமைச்சர், “கடந்த ஆண்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டது, மதுக்கடைகள் மட்டும் திறந்திருந்தது. இந்தாண்டு அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதுவரை கருப்பு பூஞ்சை நோயினால் 1,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மருத்துவமனைகளில் பிரத்தியேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது” என விவரித்தார்.

தொடர்ந்து, “குற்றச்சாட்டுகளை பெரிதுபடுத்தி மாநில, ஒன்றிய அரசுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. பேரிடர் காலத்தில் நோய் தொற்றை குறைக்கவே கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இறப்பு சான்றிதழ் வழங்குவதில் குழப்பம் உள்ளது என்றும் கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுவதாக புகார் தெரிவித்துள்ளதாகக் கூறிய அமைச்சர், “ஐசிஎம்ஆர் விதிகளின் படியே உயிரிழந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறது. இந்த விதிமுறைகள் முன்னாள் முதலமைச்சருக்கு தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது. குற்றச்சாட்டை கூறுவதற்கு முன் என்ன நடந்துள்ளது என்பதை எதிர்க்கட்சி தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.

Advertisement:

Related posts

மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா!

Gayathri Venkatesan

மநீம எஸ்.சி/ எஸ்.டி மாநில செயலாளர் பூவை ஜெகதிஷ் குமார் கட்சியிலிருந்து விலகல்!

Karthick

குறிப்பிட்ட பருவக்காலத்தில் ஏற்படும் தொற்றாக கோவிட் -19 மாற வாய்ப்பு: ஐநா

Gayathri Venkatesan