117 தொகுதிகளை உள்ளடக்கிய பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கியது.
ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அகாலிதளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. 93 பெண்கள், 2 திருநங்கைகள் உள்பட 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முக்கிய வேட்பாளர்களாக முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி (காங்கிரஸ்-பதவுர், சம்கவுர் சாகிப்), சித்து (காங்கிரஸ்-அமிர்தசரஸ்), அமரிந்தர் சிங் (பஞ்சாப் லோக் காங்கிரஸ்-பாட்டியாலா), பிரகாஷ் சிங் பாதல் (சிரோமணி அகாலிதளம்-லம்பி), குல்வந்த் சிங் (ஆம் ஆத்மி-மொகாலி) உள்ளிட்டோர் களத்தில் நிற்கிறார்கள். ராகுல் காந்தி, பிரதமர் மோடி, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர்.
1,12,98,081 ஆண்கள், 1,02,00,996 பெண்கள் மற்றும் 727 திருநங்கைகள் என 2,14,99,804 பேர் வாக்களிக்கவுள்ளனர். இவர்களுக்காக 24 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2,013 வாக்கு சாவடிகள் முக்கியமானவை என்றும் 2,952 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இத்தேர்தலில், 28,328 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 24,740 EVM-VVPAT இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க 67 பாதுகாப்பான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவ படையினர் மற்றும் பஞ்சாப் காவல்துறையின் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.