வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று கடைசி 20 ஓவர் போட்டியில் களம் இறங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி, இந்திய அணி சாதனை படைத்தது. தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.
இதில் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஒருநாள் தொடரை போல் இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்ற இந்திய அணி தீவிர முனைப்பு காட்டும். அதேநேரத்தில் இந்திய தொடரில் இதுவரை வெற்றி கணக்கை தொடங்காத வெஸ்ட்இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பெற முயற்சி எடுக்கும்.
தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பயோ பபுள்) விளையாடி வருவதால் வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கடைசி 20 ஓவர் போட்டியில் இருந்து விராட்கோலி, விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மிடில் வரிசையில் களம் காண்பதுடன் விக்கெட் கீப்பிங்கையும் கவனிக்கிறார்.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தொடக்க ஆட்டக்காரராக ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல், கடந்த ஆட்டங்களில் ஆடாத பவுலர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










