முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

பழங்குடிகளின் பாதுகாவலர் ஸ்டேன் சுவாமி


வரலாறு சுரேஷ்

கட்டுரையாளர்

பழங்குடி மக்களுக்காகப் போராடிய பாதிரியாரான ஸ்டேன் சுவாமியின் மரணம் அரசியல் தலைவர்கள் உள்படப் பல தரப்பு மக்களையும் பேச வைத்திருக்கிறது. யார் இந்த ஸ்டேன் சுமாமி? அதுகுறித்து செய்தி தொகுப்பைக் காண்போம்…

ஒரு தமிழரின் மரணம் குறித்த உரையாடல் தான், கடந்த இரு தினங்களாக, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கிறது. ஆம். ஸ்டேன் சுவாமியின் மரணத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

ஆனால், வெறும் இரங்கலோடு பலரின் அறிக்கைகள் முடிந்துவிடவில்லை. ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளி பச்சை படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கடுமையான அடக்குமுறை காரணமாகவே ஸ்டேன் சுவாமி உயிர் பறிபோய்விட்டது எனவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இதே வழக்கில் சிறைபடுத்தப்பட்டுள்ள ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லகா, சுதா பரத்வாத் போன்றவர்களின் நிலை கவலையளிப்பதாகவும், கருத்து தெரிவித்துள்ளனர் அரசியல் தலைவர்கள். இந்த பின்னணியில் தான், அவரை இழந்து வாடும் மக்கள் குறித்து, கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஸ்டேன் சுவாமியை ஒரு பாதிரியாராக பார்ப்பவர்களுக்கு, அவர் பாதிரியாராகத்தான் தெரிகிறார். ஒரு சிறைக் கைதியாக பார்த்தால், அவர் மரணம் ஒரு கைதியின் மரணமாகத்தான் பார்க்கப்படும். ஆனால், இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டவராக ஒரு தரப்பினரால் பார்க்கப்படுவதால் தான், அவர் மரணத்தை ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாத அரசியல் தலைவர்கள், அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆகவே தான் ஸ்டேன் சுவாமி யார்? ஜார்கண்ட் மக்களுக்காக அப்படி எதை செய்தார்? என்றெல்லாம் பலரும் கேள்வியோடு இணையப் பக்கங்களில் தேடி வருகின்றனர்.

தமிழரான ஸ்டேன் சுவாமி, 1937ம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். பிலிப்பைன்ஸில் சமூகவியல் துறையில் மேற்கல்வியை முடித்தவர், 1975 முதல் 1986-ம் ஆண்டு வரை பெங்களூருவில் உள்ள இந்திய சமூகவியல் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். இந்த தருணத்தில் தான், பழங்குடியின ஆலோசனை கவுன்சிலை அமைக்க, அரசியலமைப்பின் 5வது அட்டவணையில் உள்ள அம்சங்களை செயல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினார் ஸ்டேன் சுவாமி.

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில், சுமார் 40 சதவீதம் பேர் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், நிலவுரிமையை இழந்து தவிப்பதும் இவரை பாதித்தது. இதன் தொடர்ச்சியாகவே, அந்த மக்களின் நிலம், காடு, தொழிலாளர் உரிமைகள், ஊதியம் என அடிப்படை உரிமைகளுக்காக, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக போராடினார் ஸ்டேன் சுவாமி.

இந்த நிலையில் தான், கடந்த 2018ம் ஆண்டு பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வன்முறை வெடித்தது. வன்முறையை தூண்டியதாக ஸ்டேன் சுவாமி, உபா சட்டத்தின் கீழ், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே, நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், உடல்நலக்குறைவால் மும்பையிலுள்ள தலோஜா மத்தியச் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தான் உயிரிழந்துள்ளார். ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த ஸ்டேன் சுவாமியின் மனு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவரது உயிர் பிரிந்தது. இது பழங்குடி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. உபா வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்றாலும், ஸ்டேன் சுவாமி யாருக்காக போராடினார் என்பது தான், தற்போது அனைவரையும் உலுக்கியெடுத்திருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

விடுதலைப் போர்: இந்தியாவிற்கு முன்னோடியான வேலூர் புரட்சி

Gayathri Venkatesan

அரசுக்கு தேவையான ஆலோசனையை அதிமுக வழங்கும்: விஜயபாஸ்கர்!

Halley karthi

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

Saravana Kumar