பெண்களைப் போலவே திருநங்கைகளும் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்குவது, நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பது என்பது உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதையடுத்து நகரப்பேருந்துகளில் பெண்கள் இன்று முதல் இலவசமாக பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பெண்களைப் போல திருநங்கைகளுக்கும் இலவச பயணத்திட்டதை அறிவிக்கலாமே என்று சமூக வலைதளத்தில் சிலர் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் அவர், மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் பலர் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர்.







