கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பதவியேற்பு விழா மிக எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின், வெற்றி சான்றிதழை பெற்ற பின்னர், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் வைத்து அஞ்சலி செலுத்தினார் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஏற்றுக் கொள்வதாகவும், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றபோவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், தமிழகம் பாதாளத்திற்கு சென்றுள்ளதை புரிந்து திமுக கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவளித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார். திமுகவுக்கு வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்ந்தே தனது தலைமையிலான அரசு பணியாற்றுவோம் என்றும் அவர் கூறினார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.







