சென்னையில் மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
12ஆம் வகுப்பு முடித்த பிறகு அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாமல்
நகரத்திலும், கிராமங்களிலும் பல மாணவர்கள் இருக்கின்றனர். இந்த புரிதல் அற்ற
தன்மையைப் போக்க வேண்டும் என்ற வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வருகின்ற காலங்களில் கல்லூரிக்குச் செல்ல உள்ளீர்கள். கல்லூரிப் படிப்பில் முதல் மதிப்பெண் மட்டும் இல்லாமல் பல துறைகளிலும் நீங்கள் முதல்வராக விளங்க வேண்டும். ஒவ்வொன்றையும் பகுத்தறிந்து படிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரி திவ்யா பேசுகையில், மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் அடுத்தது என்ன படிக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் அவர்களுக்கான கலந்தாலோசனை முகாம் நடைபெற உள்ளது என்றார்.
8 அரங்கங்கள் கொண்ட இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்கம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம், கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சார்பில் அரங்குகள்
அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாமைப் பார்த்த பல மாணவர்கள் தங்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு பல
யோசனைகள் வந்தது என்று தெரிவித்தனர். அதில் நான் சட்டப் படிப்பு படிக்க
ஆசைப்பட்டேன். ஆனால், என்னுடைய அம்மா அந்தப் படிப்பில் உனக்கு சம்பாத்தியம்
வராது என்று தடுத்தனர். ஆனால், இந்த முகாமை பார்த்த பிறகு இந்தப் படிப்பு எப்படி
படிக்க வேண்டும். இதற்கு யாரை அணுக வேண்டும். இந்த படிப்பு படித்து முடித்தால்
எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற ஒரு விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது என்று மாணவி ஸ்வேதா தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமில்லாமல் இந்நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் வருகின்ற ஜூலை 1, 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை தமிழக மாணவர்கள் அனைவரும்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-ம.பவித்ரா







