சிவ சேனா பாலாசாஹெப் – புதிய அணி உருவாகியது

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா அணிக்கு சிவ சேனா பாலாசாஹெப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ தீபக் கேசர்கர் இதனைத் தெரிவித்துள்ளார். சிவ சேனா பாலாசாஹெப் என்ற பெயரில்…

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா அணிக்கு சிவ சேனா பாலாசாஹெப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ தீபக் கேசர்கர் இதனைத் தெரிவித்துள்ளார். சிவ சேனா பாலாசாஹெப் என்ற பெயரில் தனி குழுவாக தாங்கள் செயல்பட உள்ளதாக தெரிவித்த அவர், எந்த கட்சியுடனும் நாங்கள் இணைய மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவில் சிவ சேனாவைச் சேர்ந்த 38 எம்எல்ஏக்கள், 9 சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள ப்ளூ ரேடிசன் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கின்றனர்.

இதனிடையே, சிவ சேனா எம்எல்ஏக்களில் 16 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்ய கட்சித் தலைமை பரிந்துரைத்ததை, செயல் சபாநாயகர் நரஹரி ஜிர்வால் ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பதால், இந்த நடவடிக்கை செல்லாது என ஷண்டே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல் சபாநாயகரின் இந்த செயலை கண்டித்துள்ள அவர்கள், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர். இதனை நரஹரி ஜிர்வால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புனேவில் உள்ள ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ தானாஜி சாவந்த்தின் அலுவலகம், சிவ சேனா தொண்டர்களால் சூறையாடப்பட்டது.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, சிவ சேனா எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், அவ்வாறு திரும்பப் பெறப்படவில்லை என்று மாநில உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.