மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முதல்வரக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவர் டெல்லிக்கு சென்றபோது பிரதமர் மோடியை மட்டுமே சந்தித்தார். அப்போது கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால், குடியரசுத் தலைவரை சந்திக்க முடியவில்லை. தற்போது கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதால், குடியரசுத் தலைவரை அவர் சந்தித்திருக்கிறார். இந்நிலையில் இன்று 12.11 மணியளவில் அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருந்தாலும், இந்த சந்திப்பின்போது எழுவர் விடுதலை, நீட் தேர்வு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க, தலைமை தாங்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைக்க அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார். மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரத்தில் முனைப்புடன் செயல்படுவோம் என்றும் தெரிவித்தார். மேலும், ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கமுடியாத சூழல் நிலவுவதாக கூறினார். மேலும், இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.