நியூசிலாந்தில் ஆட்சி அமைக்க இழுபறி: ஒரு இடத்தில் பெரும்பான்மை தவறியது!

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான ஆளும் கூட்டணி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட ஒரு இடம் குறைவாகப் பெற்றுள்ளது. இதனால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நேரிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து தேர்தல் இறுதி முடிவு!

நியூசிலாந்தில் பொதுத்தேர்தலுக்கான இறுதி அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது. நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு நியூசிலாந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட முதற்கட்ட முடிவுகளின்படி, தேசியக் கட்சி தலைமையிலான மூன்று கட்சிகளைக் கொண்ட ஆளும் கூட்டணி இரண்டு இடங்கள் பெரும்பான்மையுடன் முன்னிலையில் இருந்தது. இன்று வெளியான இறுதி முடிவுகளில் சுமார் 4 லட்சம் சிறப்பு வாக்குகளும் (Special Votes) சேர்க்கப்பட்டன. இதில் வெளிநாடுகளில் இருந்து செலுத்தப்பட்ட வாக்குகள் மற்றும் கூடுதல் சரிபார்ப்பு தேவைப்படும் வாக்குகள் அடங்கும்.

ஒரு இடத்தில் பெரும்பான்மை பறிபோனது!

நியூசிலாந்தில் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை மற்றும் அரசியல் தலைமை மீதான மக்களின் அதிருப்தி ஆகியவற்றுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான தேசியக் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சிகளான ACT கட்சி 13 இடங்களையும், நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி 12 இடங்களையும் பெற்றன. மொத்தம் 130 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு 65 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 66 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஒரு இடம் குறைவாக இருப்பதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியைத் தீர்மானிக்கும் ஆப்பர்ச்சுனிட்டி கட்சி!

இந்தச் சூழலில் 7 இடங்களைக் கைப்பற்றியுள்ள ஆப்பர்ச்சுனிட்டி கட்சி (Opportunity Party) ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கியக் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்க முடியும். ஆப்பர்ச்சுனிட்டி கட்சியின் தலைவர் கியுலே வோங், தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், அதேநேரத்தில் அனைத்து வாய்ப்புகளும் திறந்தே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு எட்டப்படாவிட்டால், நியூசிலாந்தில் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது!

மறுபுறம், முன்னாள் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தலைமையிலான மைய இடதுசாரி தொழிலாளர் கட்சி 36 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பசுமைக் கட்சி 17 இடங்களையும், மவோரி மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டெ பாடி மவோரி கட்சி 5 இடங்களையும் பெற்றுள்ளன. ஆப்பர்ச்சுனிட்டி கட்சி ஆதரவு அளித்தாலும் தொழிலாளர் கட்சி தலைமையிலான கூட்டணியால் பெரும்பான்மையைப் பெற முடியாது என அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் தங்களுக்கு போதிய பலம் இல்லை என்று தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறப்பு வாக்குகளால் மாறிய தேர்தல் முடிவுகள்!

நவம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றபோது வெளியான முதற்கட்ட முடிவுகளின்படி, தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி இடதுசாரிக் கூட்டணியை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. ஆனால், வெளிநாடுகளில் இருந்தவர்கள் மற்றும் தங்களது தொகுதிக்கு வெளியே இருந்து வாக்களித்தவர்கள் அளித்த சிறப்பு வாக்குகள் (Special Votes) எண்ணப்பட்ட பிறகு, தேசியக் கட்சி கூட்டணி இரண்டு இடங்களை இழந்தது. இந்த சிறப்பு வாக்குகள் பொதுவாக இடதுசாரிக் கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்பட்டது.

உடன்பாடு எட்டுவதில் சவால்: பிரதமர் கருத்து!

ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சவாலானதாக இருக்கலாம் என்றும், இதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்றும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவசரமாக ஓர் ஒப்பந்தத்தைச் செய்து அது தோல்வியடைவதையோ அல்லது மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துவதையோ நியூசிலாந்து மக்கள் விரும்பமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் அதிருப்தி!

இந்தத் தேர்தலில் தேசியக் கட்சி குறைந்த வரி, மலிவான எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது, பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்தது. தொழிலாளர் கட்சியோ மருத்துவச் செலவுகள், பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலையைக் குறைப்பது, சமூக வீட்டுவசதித் திட்டங்களுக்கு அரசின் ஆதரவை அதிகரிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது.

இருப்பினும், நாட்டில் அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை, வேலையின்மை மற்றும் அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையின்மை ஆகியவை வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையே, நியூசிலாந்தில் இருந்து மக்கள் வெளியேறும் எண்ணிக்கையும் சாதனை அளவை எட்டியுள்ளது. முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உள்ளிட்ட பலரும் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இதனால் பொருளாதார நெருக்கடியும், அரசியல் மீதான மக்களின் அதிருப்தியும் இந்தத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது ஆப்பர்ச்சுனிட்டி கட்சியின் முடிவைச் சார்ந்தே நியூசிலாந்தில் அடுத்தகட்ட ஆட்சி அமைவது தீர்மானிக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.