புனித அந்தோணியார் ஆலய திருவிழா; கச்சத்தீவுக்குப் பயணித்த மீனவர்கள்

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக 76 மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கச்சத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டனர். கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருடந்தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இதில் இலங்கை, இந்திய பக்தர்கள்…

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக 76 மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கச்சத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டனர்.

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருடந்தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இதில் இலங்கை, இந்திய பக்தர்கள் கலந்துகொண்டு இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று மாலை கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி, சிலுவைப்பாதை நடைபெற்று பின்னர் சிறப்பு திருப்பலியும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து நாளை மீண்டும் சிலுவை பாதை நடத்தி சிறப்பு திருப்பலி நடத்திய பின்னர் கொடி இறக்கப்பட்டு கச்சத்தீவு திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து 100 பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வரைக்கும் 80 பக்தர்கள் மட்டுமே செல்வதற்காக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்பவர்களை முழுமையான பரிசோதனை செய்வதற்காகவும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவும் 150 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதோடு இந்தியக் கடலோர காவல்படை, மரைன் போலீசார், கியூ பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவிற்குச் செல்வோர் முகக் கவசம் அணிந்து கொரோனா விதிமுறையைப் பின்பற்றிச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.