ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்து வரும் டிஎஸ்பி மாயவன் தலைமையிலான காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த
லோகநாதன் என்பவரது மகள் தாமரைக்கனி. இவர் நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். தாமரைக்கனியின் அம்மா மரணம் அடைந்த நிலையில், கூலித் தொழிலாளியான லோகநாதனின் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று மாத காலமாக தாமரைக்கனி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி அலுவலக எல்கைக்குட்பட்ட பகுதிகளில்
பள்ளியிலிருந்து இடை நின்ற மாணவர்கள் குறித்து காவல்துறையினர் கணக்கெடுத்தனர்.
இதில் தாமரைக்கனி பள்ளிக்கு செல்லாமல் இடை நின்றது தெரிய வந்தது. உறவினர்
வீட்டில் தங்கி இருந்த தாமரைக்கனியை அழைத்துப் பேசி மீண்டும் அவரைப் பள்ளியில்
சேர்ப்பதற்கான நடவடிக்கையை ஸ்ரீவைகுண்டம் டி எஸ் பி மாயவன் மேற்கொண்டார்.
இதனால் தாமரைக்கனி நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிப்பதற்காக மீண்டும் சேர்க்கப்பட்டார். இதற்கு முன்னரே கருங்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆழ்வார்திருநகர் டீக்கடையில் வேலை பார்த்தது தெரியவந்ததும் அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்க டிஎஸ்பி மாயவன் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
—ரெ.வீரம்மாதேவி







