புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த மூன்று வாலிபர்களை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி காலப்பட்டு பகுதியில் பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் காலப்பட்டு போலீஸார் காலாபட்டு பகுதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 வாலிபர்களை கையும் களமாக பிடித்தனர்.
விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் நிரோஜன் (20), வசந்தகுமார் (21), அகிலன் (27) என்பதும், அவர்கள் சென்னையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.
-ம.பவித்ரா








