சமீபத்தில் மரம் ஏறும் Scooter விடியோவை பார்த்த சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து எப்படி இதை ஆர்டர் செய்வது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பெரும்பாலானோருக்கு மரம் ஏறுவது என்பது மிகப்பெரிய சவாலான ஒன்று. அதிலும், தென்னை மரம், பனை மரம், பாக்கு மரம் போன்ற உயரமான மரங்களில் ஏறுவதற்கென்றே தனி திறமை வேண்டும். இத்தகைய சிரமத்தை போக்க எத்தனையோ இளம் விஞ்ஞானிகள் புது புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி இருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரைச் சேர்ந்த 51 வயதான கணபதி பட் என்பவர் கடந்த வருடம் கண்டுபிடித்திருந்த ‘மர ஸ்கூட்டர்’என்கிற கருவி அன்று பலரது பாராட்டையும் பெற்றிருந்தது.
இந்த ‘மர ஸ்கூட்டர்’ மரம் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சில வினாடிகளே எடுத்துகொள்வதோடு, எந்த ஒரு சிரமமும் இன்றி எளிதான முறையில் எடுத்து செல்லவும், பயன்படுத்தவும் அனைத்து வசதிகளும் இதில் உண்டு. குறிப்பாக இந்த “மர ஸ்கூட்டர்” 275 அடி உயர மரத்தை 30 வினாடிகளில் ஏற அனுமதிக்கிறது. அப்படிப்பட்ட இந்த கருவி அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று 300க்கும் மேற்பட்ட ஸ்கூட்டரகளை உருவாக்கி விற்றுள்ளதாக கணபதி பட் அன்றே கூறியிருந்தார்.
இந்நிலையில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இந்த கருவி மீண்டும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. காரணம், இந்தியக் கோடீஸ்வர தொழிலதிபரும், பன்னாட்டு நிறுவனமான சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு இந்த ‘மர ஸ்கூட்டர்’ குறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தன் மனதில்பட்ட விஷயங்களை பதிவு செய்திருந்ததால் தான்.
அந்த ட்விட்டில் ”தென்னை மரம் ஏறுவதற்கு ஏன் இயந்திரம் இல்லை என்று நான் பலமுறை ஆவேசப்பட்டுள்ளேன். இந்த வீடியோவைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விடியோவை நான் ஏற்கனவே 15 முறை பார்த்துவிட்டேன், அற்புதமான கண்டுபிடிப்பு. இந்த இயந்திரத்தை உச்சி வரை ஏறி நிறுத்தும்போது எப்படி ”lock”செய்கிறார்கள் ? அவர்கள் இறங்கும் போது எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள்? இந்த இயந்திரங்களை நான் எப்படி ஆர்டர் செய்யலாம்?! என்ற கேள்விகளோடு, பாராட்டும் விதமாக Applause
Emoji போட்டு பதிவிட்டிருந்தார். தற்போது இந்த ட்விட் வைரல் ஆகி வருகிறது.
I have obsessed about "why is there no machine for climbing coconut trees" and I am so delighted to find this video. I already watched it 15 times.
Amazing invention. How do they "lock" it when it stops? How do they control the descent?
How can I order these machines?! 👏👏 https://t.co/ENEB6iX2jA
— Sridhar Vembu (@svembu) March 17, 2023
- பி.ஜேம்ஸ் லிசா










