கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆசியாவின் எதிர்காலம் குறித்த 27வது சர்வதேச கருத்தரங்கம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று கோத்தபய ராஜபக்ச பேசினார். அப்போது, சுதந்திரத்திற்குப் பிறகு எப்போதும் இல்லாத வகையில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். இது இலங்கை மக்களை கடுமையாக பாதித்து வருவதாகவும் இதனால் சமூக பதற்றம் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் நட்பு நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக ராஜபக்ச தெரிவித்தார்.
தற்போது இலங்கையின் கடன் 51 பில்லியன் டாலராக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், எரிபொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா பாதிக்கப்பட்டதே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்துள்ள கோத்தபய ராஜபக்ச, உக்ரைன் – ரஷ்யா போரும் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த கடுமையான நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வர உலக நாடுகளின் ஆதரவு தங்களுக்கு மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ள ராஜபக்ச, மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகிய அத்தியாசியப் பொருட்கள் கிடைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.








