நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் நெடுந்தீவு தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
இதனைத்தொடர்ந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர்.
21 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீனவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்டு தர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





