இலங்கை – தமிழ்நாடு மலையக தமிழர் தோழமை இயக்கம் தொடக்கம்!

இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை கெளரவ தலைவராக கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை-தமிழ்நாடு மலையக தமிழர் தோழமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை-தமிழ்நாடு மலையக தமிழர் தோழமை…

இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை கெளரவ தலைவராக கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை-தமிழ்நாடு மலையக தமிழர் தோழமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை-தமிழ்நாடு மலையக தமிழர் தோழமை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர்களாக, கெளரவ தலைவர் – இலங்கை எம்பி மனோ கணேசன், தலைவர் – எம்.எஸ்.செல்வராஜ், துணை தலைவர்கள் – பி.டி.ஜோன், கே.ஏ.சுப்பிரமணியம், மிசா மாரிமுத்து, செயலாளர் – சட்டத்தரணி தமிழகன், துணை செயலாளர்கள் – சட்டத்தரணி ஈசன், டார்வின் தாசன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக செல்வராணி, கலா மற்றும் ஆலோசகர் குழு உறுப்பினர்களாக  முனைவர் ஸ்டீபன் ஆன்டணி, பிஜோய், சிவஞானம், டி.எஸ்.எஸ்.மணி, அஜித் மேனன் ஆகியோரும் நியமிக்கபட்டுள்ளனர்.

இலங்கை-தமிழ்நாடு மலையக தமிழர் தோழமை இயக்க நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய, இலங்கையின் கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியதாவது:

”இது ஒரு வரலாற்று முகியத்துவம் மிக்க நாள். இலங்கையில் வாழும் இந்திய-தமிழ்நாடு வம்சாவளி மலையக தமிழரும், தாயகம் திரும்பியதாக சொல்லப்படும் தமிழ்நாட்டில் வாழும் மலையக தமிழரும் அமைப்புரீதியாக ஒன்றுபடும் நாள்.

இதன்மூலம் இலங்கையில் வாழும் இந்திய தமிழ்நாடு வம்சாவளி மலையக தமிழர் எதிர்நோக்கும் பிரச்னைகள், தாயகம் திரும்பியதாக சொல்லப்பட்டு தமிழ்நாட்டில் வாழும் மக்களின் துன்பங்களையும் அறிய கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் ஏறக்குறைய 15 லட்சம் இந்திய-தமிழ்நாடு வம்சாவளி மலையக தமிழர்கள் வாழ்கிறார்கள். அதேபோல் தாயகம் திரும்பியதாக சொல்லப்படுவோர் தமிழ்நாட்டில் 25 லட்சம் பேர் வாழ்கிறார்கள். ஆக மொத்தம் 40 லட்சம்.

இந்த 25 லட்சம் பேருடன் சேர்த்து மொத்தம் 40 லட்சம் பேரும் இலங்கையில் குடியுரிமையுடன் வாழ்ந்திருக்க வேண்டும். வாழ்ந்திருந்தால் இலங்கை பாராளுமன்றத்தில், 40 எம்பிகள் இருந்திருப்போம். அதன்மூலம் அரசியல்ரீதியாக நாம் பலம் பெற்று இருந்திருப்போம்.

ஆனால், 1948-ம் ஆண்டு நமது குடியுரிமை பறிக்கப்பட்டது. அப்புறம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இனவாத அரசை எதிர்த்து அன்றைய நமது தொழிற்சங்க தலைமைகள் மக்களை அணி திரட்டி போராட்டங்களை செய்ய தவறினார்கள். அப்போது காத்திரமாக செயற்பட்டு இலங்கை அரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தவறிய, இந்திய அரசு, அதன் பின் 1964-ம் ஆண்டு மக்களை இந்தியாவுக்கு வரவழைத்து பலவீனமடையவும் செய்து விட்டது.

அன்று அப்படி தாயகம் திரும்பிய மக்களின் வாழ் நிலைமையும் மிகவும் மோசமாகவே இருக்கிறது. இவர்களுக்கு சரியான நல்வாழ்வு திட்டங்களை அமைத்து தர இந்திய அரசு தவறி விட்டத்தையும் கண்கூடாக காண்கிறேன்.

மறுபுறம், 1948 முதல் 1972 வரை, இலங்கை பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ்தான் இருந்தது. அதன் பிறகு தான் இலங்கை குடியரசானது. குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போதும்,1956 சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும், 1964ல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும், பிரிட்டீஷ் அரசு வாய் திறக்கவில்லை.

அன்றைய நமது தொழிற்சங்க தலைமைகளும் இந்த அநீதிகளை பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எடுத்து கூறி, நியாயம் கேட்கவும் இல்லை. எல்லாவற்றுக்கும்  மேல் எமது மூதாதையினரை 1823 முதல் இலங்கைக்கு கொண்டு சென்று, தமக்கு ஏற்றுமதி வருவாய் தந்த பெருந்தோட்டங்களை அமைத்ததும், பிரிட்டிஷ் முடியாட்சித்தான்.

ஆகவே இந்த ஒட்டு மொத்தம் 40 லட்சம் தமிழர்கள் தொடர்பாக இலங்கை அரசு, இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசு ஆகியவற்றுக்கு பெரும் தார்மீக பொறுப்பும், கடமையும் இருக்கின்றன. இந்த அரசுகள் தமது தேசிய சொந்த நலன்களுக்காக இனியும் நம்மை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பயன்படுத்த விட முடியாது. இந்த மூன்று அரசுகளும் முன்வந்து எமக்கான நல்வாழ்வு திட்டங்களை அமைத்து தர வேண்டும். அதை நாம் இனி தேசிய, சர்வதேசிய அரங்குகளில் வலியுறுத்தி தீர்வுகளை தேடி பெறுவோம். இலங்கை-தமிழ்நாடு மலையக தமிழர் தோழமை இயக்கத்தின் மூலம் இந்த நோக்கங்களை நாம் வலியுறுத்துவோம்.”

இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.