இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான் தோனி. 2004 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒரு நாள் போட்டி, 98 டி20 போட்டிகளில் விளையாடி 17 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். 16 சதங்கள் மற்றும் 108 அரை சதங்கள் இதில் அடங்கும்.
கேப்டனாக, பேட்ஸ்மேனாக, விக்கெட் கீப்பராக பல சாதனைகளை நிகழ்த்திய தோனி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தோனி பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள பதிவில்,
”இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் #CSK இன் தல-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் சாதனைகள் மற்றும் உங்கள் பணிவான தொடக்கம் இந்தியா முழுவதும் உள்ள எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையில், குறிப்பாக சாதாரண பின்னணியில் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் தொடர்ந்து மேலும் பிரகாசிக்கவும், உங்கள் ஒப்பற்ற தலைமைப் பண்புகளால் அனைவரையும் ஊக்குவிக்கவும்” என குறிப்பிட்டுள்ளார்.







