கடலூரில் தக்காளி ஒரு கிலோ ரூ 20-க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்கடையில் பொதுமக்கள் குவிந்து போட்டிப்போட்டுக்கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர்.
கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ரூ120 வரை உயர்ந்து உச்சத்தை எட்டியது. இதனால் ஆப்பிள் அந்தஸ்து தக்காளிக்கு வந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தக்காளிளை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையை சரிசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசினால், ரேஷன்கடைகளில் குறைந்தவிலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் முழுவதும் தக்காளி விலை ரூ 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அக்கடையில் குவிந்து போட்டிப்போடுக் கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர்.
இது கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த காய்கறி கடை உரிமையாளர் ராஜேஷ் கூறுகையில் ”கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து சுமார் 1.5 டன் தக்காளி எங்கள் கடைக்கு வந்தது. தற்போது தமிழ்நாட்டில் ரூ 100 முதல் ரூ 150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ தக்காளி ரூ 20க்கு விற்பனை செய்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்ற நோக்கில் விற்பனை செய்து வருகிறோம். கோரோனா காலத்தில் 5 கிலோ காய்கறிகள் ரூ 100க்கும், வெங்காயம் கிலோ ரூ 100க்கு விற்பனை செய்யப்பட்ட போது ரூ.10 விற்பனை செய்தேன். தக்காளியை குறைந்த விலையில் விற்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது” என்றார்




