அதிபர் மாளிகையை நோக்கி படையெடுத்த மக்கள்; தப்பியோடிய அதிபர்

இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியுள்ளார். இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. ஒரு தேநீர் ரூ.180, அரிசி ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு…

இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியுள்ளார்.

இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. ஒரு தேநீர் ரூ.180, அரிசி ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர். இப்படியாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையே நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டமும் தீவிரமடைந்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். எனினும், இலங்கையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கொழும்புவிலுள்ள இலங்கை அதிபர் மாளிகையை நோக்கி போராட்டக்காரர்கள் இன்று முன்னேறினர். அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலைகளில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல தடைகள் போடப்பட்டிருந்தன. அந்தத் தடைகளை எல்லாம் போராட்டக்காரர்கள் தகர்த்தெறிந்தனர். அவர்கள் மீது  போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கலைக்க முயற்சித்தனர்.

எனினும், தடைகளை தகர்த்தெறிந்த போராட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக அதிபர் மாளிகையின் பிரதான வாயிலை வந்தடைந்தனர். அந்த வாயிலுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அதிபர் மாளிகை அருகில் இருந்த தண்ணீர் பீய்ச்சியடிக்கும் 2 வண்டிகளை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், அதனை பயன்படுத்தி காவல்துறையினர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். இரும்புக் கம்பிகளால் பின்னப்பட்ட வேலிகளையும் போராட்டக்காரர்கள் இழுத்தெடுத்து கீழே தள்ளிவிடுகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில் அதிபர் மாளிகைக்கு முன்பு போராட்டம் முற்றியுள்ள நிலையில், அங்கிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.