முக்கியச் செய்திகள் சினிமா

இலங்கை தமிழர்களை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம் – இயக்குனர் பேரரசு

தமிழர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ தமிழர்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள் என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

பளபள பப்பாளிக்கா என்கிற வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு மற்றும் ஒவ்வொன்றும் ஒரு விதம் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இயக்குனர் பேரரசு, நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள இப்பாடலுக்கு அஸ்மின் பாடல் வரிகள் எழுதியுள்ளார். கம் லீஃப் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சுமதி குமாரசாமி தயாரித்துள்ளார். தினேஷ் வைரா இயக்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் காதல் சுகுமார் பேசும்போது,

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பது போல் சினிமா எடுத்துப் பார் என்றும் சொல்லலாம். சினிமா எடுப்பது அவ்வளவு சிரமமானது. நான் 200 படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் சினிமாவின் வெற்றிக்கான சூட்சுமம் எனக்குப் புரியவில்லை. இப்போது ஏராளமான பேர் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள் வாக்காளர் அட்டை உள்ளவர்கள் எல்லாம் வாய்ப்பு தேடி வந்து விட்டார்கள். அந்த அளவிற்குப் போட்டி நிறைந்ததாக இருக்கிறது சினிமா என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது,

பேரரசு அவர்களை என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாது. நான் மூன்று நான்கு சின்ன படங்கள் இசையமைத்துப் பெரிதாக வளராமல் இருந்தபோது இமயமலை போல் சிவகாசி பட வாய்ப்பு கொடுத்த அவர், எனக்கு காட்பாதர் போன்றவர்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில்

ராஜ்யசபை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துகள். திருப்பாச்சி படத்தில் பட்டாசு பாலு, சனியன் சகடை, பான்பராக் ரவி என்ற அந்த மூன்று வில்லன்கள் பாத்திரங்களில் நடிப்பதற்கு ஆட்கள் தேடிய போது இரண்டு பாத்திரங்களுக்கு ஆட்களைப் பிடித்து விட்டோம். மூன்றாவது அந்த சனியன் சகடைக்கு மட்டும் ஆட்களைக் தேடிக் கொண்டிருந்தோம். அந்த வில்லன் பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரியான பெரிய கனத்த உருவம் ஒன்று, ஒரு நாள் மாலை பிரசாத் லேபிலிருந்து எதிரே சாலையில் கடந்ததைத் தூரத்தில் நின்று பார்த்தேன். இவர்தான் சரியாக இருக்கும் என்று நான் உதவி இயக்குநர்களை விட்டு விசாரித்து வரச் சொன்னேன். போய்ப் பார்த்தால் அவர்தான் ஸ்ரீகாந்த் தேவா என்றார்கள். பதறிப் போய் விட்டேன். அப்படிப்பட்ட உருவத்துக்குச் சொந்தக்காரர் அவர். பிறகுதான் சிவகாசி படத்தில் அவரை இசையமைப்பாளராகத் தேர்வு செய்தேன்.

இங்கே வந்துள்ள தயாரிப்பாளர் இசையமைப்பாளர் அருண் குமாரசாமி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தாலும் அவர் இலங்கைக்காரர் . இலங்கைத் தமிழர்கள் தான் நல்ல சுத்தமான தமிழைப் பேசித் தமிழைக் காப்பாற்றுகிறார்கள். ஆனால் அவர்களை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம். கண்டிப்பாக அங்கே இன்றுள்ள நிலைமைகள் மாறும். அங்குள்ள நெருக்கடி நிலை மாறும். அங்குள்ள மக்களை சிங்களர், தமிழர் என்று பார்க்காமல் அதையும் தாண்டி இலங்கையில் உள்ள மனிதர்கள் என்று காப்பாற்ற இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகம் வந்தாரை வாழவைக்கும். தமிழர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ தமிழர்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள். அதேபோலத் தமிழர்கள் ஆள்கிறார்களோ இல்லையோ வந்தாரை ஆளவைப்பவர்கள். எனவே தமிழர்களாகிய இவர்களையும் வரவேற்று வாழ்த்துவோம் என்று இயக்குநர் பேரரசு பேசினார்.

 

– தினேஷ் உதய்  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram