ரஷ்யாவில் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்பதால் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவிஷீல்டு, பைசர், கோவாக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து தடுப்பூசிகளும் பெரும்பாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே பரிசோதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கொரோனாவின் அடுத்தடுத்த அலை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களையும் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எனவே அவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இதற்காக பல தடுப்பூசிகள் பிரத்யேகமாக சிறாருக்காகவும் உருவாக்கி வருகின்றன.
அந்தவகையில், பைசர் போன்ற தடுப்பூசிகள் ஏற்கனவே சிறார்களிடத்தில் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் ரஷ்யா, ஸ்புட்னிக் வி தடுப்பூசியை சிறார்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதற்காக 12 முதல் 17 வயது வரையிலான பதின்ம வயது கொண்ட 100 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த பரிசோதனைகளை முடித்தவுடன், அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது







