திருவல்லிக்கேணி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கல்லூரி விளையாட்டு விழா மற்றும் சர்வதேச யோகா தினம் அக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வரலாற்றுத் தடம் பதித்த ஒரு புனித மண்ணில் இன்று நின்று கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வு உள்ளதாகத் தெரிவித்த அவர், இது சாதாரண கல்லூரி அல்ல உலகம் முழுவதும் பல ஆசிரியர்களை உருவாக்கிய கல்லூரி எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு காலத்தில் இங்கு இடம் கிடைப்பது அவ்வளவு கடினம் எனவும், இந்த கல்வி நிறுவனம் எத்தனை எத்தனை ஆசிரியர்கள் உருவாக்கி உள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
2004-இல் சுனாமி வந்த போது, இங்கு இருந்த நூலகம் எதுவும் ஆகவில்லை. அந்த அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை வியந்து பார்க்கிறேன் எனத் தெரிவித்த அவர், எந்த வயதானாலும் சரி விளையாட்டு முக்கியம். விளையாட்டு நீண்ட ஆயுளைத் தரக் கூடியது. இதனால், கொரோனா அண்டாது. யோகா நீண்ட ஆயுளுடன் வைத்து இருக்க உதவும். யோகாவை உருவாக்கியது தமிழ் சித்தர்கள் தான் எனக்கூறினார். காலநிலை மாற்றத்தால் மனிதனின் ஆயுள் குறைந்து கொண்டே வருகிறது. நீண்ட ஆயுளுடன் இருப்பவர்கள் ஒன்று விளையாட்டு வீரராக இருப்பார்கள், யோகா பயிற்சி மேற்கொள்பவர்களாக இருப்பார்கள் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நீங்கள் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் அதற்குக் காரணம் ஆசிரியர்கள் தான் என்பதனை மறந்துவிடக்கூடாது எனக்கூறினார்.







