10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், ஒரே நாளில் 11 மாணவர்கள் நேற்று உயிரிழப்பு செய்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நேற்றைய தினம் (ஜூன் 20), 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதன் அடிப்படையில் 10ஆம் வகுப்புத் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், 12 ஆம் வகுப்புத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்தன. மேலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.07% பேரும் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.76% பேரும் தேர்ச்சி அடைந்தனர். பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை என்றும் அவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவுகளின் எதிரொலியாக, ஒரே நாளில் 11 மாணவர்கள், 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக
உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.உயிரை மாய்த்துக் கொண்ட 11 பேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆவர். மேலும் 28 மாணவர்கள் உயிரிழப்புக்கு முயன்று ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் வடமாவட்டங்களிழும் அதிகமாக உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனவே, நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வுக்கு முன்னரே மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.
– சத்யா விஸ்வநாதன்







