’வெற்றி தோல்வி பற்றிலாம் கவலைப்படலை’: ராகுல் டிராவிட்

வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுவதில்லை என்றும் அணியாக நன்றாக விளையாடுவதே முக்கியம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3…

வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுவதில்லை என்றும் அணியாக நன்றாக விளையாடுவதே முக்கியம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, செஞ்சூரியனில் நாளை தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் செஞ்சூரியனில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை. அதனால், இந்திய அணிக்கு இந்தப் போட்டி சவாலாகவே இருக்கும். ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியான இது, பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கு முதல் டெஸ்ட் ஆகும்.

இந்தப் போட்டி பற்றி அவர் கூறியிருப்பதாவது:

ஒரு பயிற்சியாளராக எனது எதிர்பார்ப்பு, வீரர்கள் நன்றாக தயாராகி விளையாட வேண்டும் என்பதுதான். முழு திறமையை வெளிப்படுத்தி விளையாட வேண்டும். போட்டியின் வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை. அதில் கவனம் செலுத்த முயற்சிப்பதில்லை. சில நேரங்களில் அது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆனால், திறமையை பயன்படுத்தி உறுதியோடு இறங்கினால் எல்லாம் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது. தொடர் முழுவதும் அந்த உறுதியை காட்ட முடிந்தால், அதைதான் நான் எதிர்பார்க்க முடியும். இருந்தாலும் அது எளிதானதல்ல. தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த நாட்டில் எதிர்கொள்வது சவாலான விஷயம். நாம் சிறப்பாக செயல்பட்டால், கண்டிப்பாக முடிவு சாதகமாக வரும். இது சரியான வாய்ப்பு. வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.