பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 6,000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக பரவி வருகிறது. உலகிலேயே அமெரிக்காவை அடுத்து கொரோனா அதிகமாக பாதித்த நாடுகளில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,68,912 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 904 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை ரெம்டெசிவிர் மருந்து மற்றும் அதனை தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் அனைத்தையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி 3 நாட்கள் வரை இருப்பு இருக்கக் கூடிய அளவுதான் உள்ளதாக சுட்டிக்காட்டி, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை போக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
வெண்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பெரும்பாலான மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், அன்றாடப் பணியாளர்களுக்கு மீண்டும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்ட அவர், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கு வங்கி கணக்கில் மாதந்தோறும் 6,000 ரூபாய் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.