கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி 221 ரன்கள் குவித்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 14 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதையடுத்து கிறிஸ் கெய்ல் களம் இறங்கி ராகுலுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதில், கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து வந்த தீபக் ஹூடா ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை நாளாபுறமும் சிதறடித்தார். கேஎல் ராகுல் 30 பந்தில் அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா 20 பந்தில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
இந்நிலையில், தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.







