மத்திய அரசின் பட்ஜெட் ஏழை மக்கள் மீது நடத்தப்பட்ட அமைதி தாக்குதல் என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “பாரத் ஜோடோ யாத்திரை மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை லட்சக்கணக்கான மக்களிடம் உரையாட முடிந்தது. மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். தற்போது இந்தியா சென்று கொண்டிருக்கும் திசையிலும் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏழைகளாக இருந்தாலும், நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், கிராமமாக இருப்பினும், நகரமாக இருப்பினும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற மும்முனை தாக்குதல்களால் மக்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர்.
2023-24 இந்த சவால்களை எல்லாம் சரி செய்ய தவறியதுடன், ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைத்து அவர்களை மேலும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளனர். மோடி அரசாங்கத்தால் ஏழை மக்கள் மீது நடத்தப்பட்ட அமைதி தாக்குதல் இது. 2004–14 ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த தொலைநோக்கு திட்டங்களின் இதயத்தைத் தாக்கி முடக்கிவிட்டனர். ஒவ்வொரு இந்தியருக்கும் நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதுதான் கடமை. அந்த வகையில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதுடன், சமூகரீதியாகவும், பொருளதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் அவர்களை வலுப்படுத்துவத்ற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.
மக்களுக்கு கல்வி, உணவு, வேலை வாய்ப்பு, ஊட்டச்சத்து ஆகியவற்றை வழங்குவது அரசின் கடமை. இந்த உரிமைகளைப் பற்றி பேச பிரதமர் விரும்பவில்லை. கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஏழைகளுக்கான நிதியை திரும்பப் பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் தினக்கூலிகள் உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்காமல் போராடுகின்றனர். இந்தத் திட்டங்கள் மூலம் அவர்களின் ஊதியம் சந்தை விலைக்குக் கீழ் செல்லும். நிதிப்பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு ஏழைகளையும், பின்தங்கிய மக்களையும் கடுமையாக பாதிக்கிறது.”என்று கூறியுள்ளார்.
-ம.பவித்ரா








