பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றால் மக்கள் மிகுந்த இன்னலக்கு உள்ளாகி இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தனது உறுதியான ஆதரவை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை மக்கள் விடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், தற்போதைய நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கும் அரசுக்கும் இந்திய அரசு தொடர்ந்து உதவும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச சமூகமும் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.










