மணமகள் தேவை என்ற போஸ்டரை ஊர் முழுக்க ஒட்டிய விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் மல்லி எம்.எஸ்.ஜெகன் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து மணமகள் தேடிய காலம் எல்லாம் மலையேறி வருகிறது. தற்போது இணையத்தில் மேட்ரிமோனியல் தளங்களையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இந்த நிலையில், மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஜெகன் என்பவர், மணமகள் தேவை என்ற போஸ்டரை வெளியிட்டார்.
அந்தப் போஸ்டரில் அவருடைய நட்சத்திரம், ராசி, சாதி, வேலை, வருமானம், முகவரி ஆகிய விவரங்களையும், நிலம் கூட வைத்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவருடைய ஸ்டைலான புகைப்படத்தை வைத்து டிசைன் செய்துள்ளார்.
அவர் டிசைனர் என்பதால் இந்த யோசனை வந்ததாகக் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு 27 வயதாகிறது. கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ள பெண் தேடி வருகிறேன். நான் பல போஸ்டர்களை டிசைன் செய்திருக்கிறேன். ஒரு போஸ்டரை நான் டிசைன் செய்துகொண்டிருந்தபோது தான் ஏன் நானே எனக்கு ஒரு போஸ்டரை டிசைன் செய்துகொள்ளக் கூடாது என்று எண்ணம் தோன்றியது.
இதையடுத்து, மணமகள் தேவை என்ற போஸ்டரை உருவாக்கினேன். திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து தருவதாக கூறி என்னிடம் பலர் பணம் பெற்றுக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் திரும்பி வரவே இல்லை. நான் மணமகள் வீட்டிலிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், திருமண புரோக்கர்களிடம் இருந்து அழைப்பு பெறுகிறேன். ஒருவேளை மணமகள் வீட்டிலிருந்து அழைப்பு வந்தால், நன்றி தெரிவிக்கவும் ஒரு போஸ்டரை வடிவமைத்து வைத்திருந்தேன் என்று கூறுகிறார் ஜெகன்.
– பரசுராமன்.ப







