“இந்தியா” கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேட்டி..!

’இந்தியா’ கூட்டணியில் இன்னும் சில அரசியல் கட்சிகள் இணையும் எனவும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் அதிகபட்ச கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறேன் எனவும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு…

’இந்தியா’ கூட்டணியில் இன்னும் சில அரசியல் கட்சிகள் இணையும் எனவும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் அதிகபட்ச கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறேன் எனவும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 24-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  இரண்டாவது ஆலோசனை கூட்டம் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் பெங்களூரூவில் நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது. பாஜகவுக்கு இக்கூட்டணி கடும் போட்டியை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பாட்னாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“மும்பையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான இந்திய கூட்டணியின் உத்திகள் குறித்து விவாதிப்போம். மேலும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் விவாதிக்கப்படும். எங்கள் கூட்டணியில் இன்னும் சில அரசியல் கட்சிகள் இணையும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் அதிகபட்ச கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறேன். நான் அந்த திசையில் வேலை செய்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.