தீபாவளியை கார்கிலில் இந்திய நாட்டு ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி, வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடிய போது அவர்களுடன் நின்று கைத்தட்டி ரசித்தது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து ஆண்டுதோறும் தீபாவளியை இந்திய எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளிக்கு லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் எல்லையில் இன்று ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தியது, அவர்களுடன் கலந்துரையாடியது குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டாது என தீபாவளியை கொண்டாடினார். இதையடுத்து, ராணுவ வீரர்கள் இசை கருவிகளை வாசித்து பாட்டு பாடினர். அப்போது, அவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை இசைக்கருவிகள் முழங்க வீரர்கள் நேர்த்தியாக பாடினர். இதனை அவர்களுடன் நின்று பிரதமர் மோடி கைத்தட்டி ரசித்தார். இந்த வீடியோவை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி பகிர்ந்துள்ள வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இதயம் இதயம் துடிக்கின்றதே என பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் டிவிட்டர் பதிவில்,
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்…
தாய் மண்ணே வணக்கம்….
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். ராணுவ வீரர்கள் இந்தியில் பாடிய வரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் அதற்கான அர்த்தத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.









