பெரியாரின் 147வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றார். அப்போது, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன்.
சுயமரியாதையும், ஆளுமை திறனும், பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்து கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும், மனிதபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் என்றார். முதலமைச்சர் விஜய் உறுதிமொழியை வாசிக்க துறை செயலாளர்கள் உறுதிமொழியேற்றனர். மேலும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். முன்னதாக தலைமை செயலகத்தில் தந்தை பெரியார் படத்துக்கு முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செய்தார்.




